தேர்விற்கு மாணவர்கள் தயாராவது எப்படி?

 மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

  பள்ளி திறந்த முதல்நாளிலிருந்தே படிப்பைத் திட்டமிட்டுக் கொண்டால் கடைசிநேரத்தில் சுமையால் தள்ளாட வேண்டியதில்லை. அதுமட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே வாசிக்கத் தொடங்கினால், நாம் படிப்பவற்றைக் குறித்து விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள அவகாசம் கிடைக்கும். நாம் வாசித்தவை நம் வீட்டின் முகவரியைப் போல மனத்திலிருந்து அகலாமல் அப்படியே நின்றிருக்கிறது.

· பள்ளி திறந்த நாளிலிருந்தே நாம் படிப்பதைத் தொடங்கிவிடுவோம். படிப்பது என்பது தேர்வுக்காக மட்டுமல்ல - நிறைய தெரிந்து கொள்வதற்காக - நம்மை விருத்தி செய்து கொள்வதற்காக வாழ்க்கைக்குமான அறிவைப் பெறுவதற்காக.

·  வகுப்பறையில் கவனிப்பது ஒவ்வொரு நாளும் நடக்கின்ற பாடங்களை வகுப்பறையில் உற்றுக் கவனிப்பது அவசியம். நுண்ணறிவு (Intelligence) என்பது யாருக்கும் பாரம்பரியச் சொத்து அல்ல. நாம் இந்த நொடியிலேயே முழுமையாக இருக்கமுடியுமானால் நுண்ணறிவுடன் இருக்கமுடியும். இந்த நொடியில் நுண்ணறிவுடன் இருந்துவிட்டு அடுத்தநொடியிலேயே நுண்ணறிவு இழந்து விடவும் முடியும்.

· தள்ளிப்போட வேண்டாம் மனம் எதையுமே தள்ளிப்போடுகிறது. சோம்பல், அயற்சி, ஆர்வமின்மை ஆகிய இம்மூன்றும் செய்யவேண்டிய செயலை நாம் நாளை செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடச் செய்கிறது. தேர்வுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன.

·        நம் கவனத்தைச் சிதறவிடாமல் பாடத்தைக் கவனிப்பது நாம் படிக்கும் வேலையைச் சுலபமாக்குகிறது. ஒவ்வொரு நாளும் பள்ளிமுடிந்ததும் அன்று நடந்ததை அன்றே படித்து முடிப்பது நாம் கவனித்ததை ஈரம் உலர்வதற்குள் வாசிப்பது நமது ஞாபகத்திறனையும், அறிந்து கொள்ளும் ஆற்றலையும் அதிகரிக்கும்.
·        தினசரி இரண்டு மணிநேரம் போதும்: ஒரு நாட்குறிப்பில் இன்று நடந்த பாடங்களை வரிசைக்கிரமமாகக் குறிப்பிட்டு அவற்றைப் படித்து முடிப்பதும்- படிக்கின்றபோதே முக்கியமானவற்றைக் குறிப்புகள் எடுப்பதும், நமக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களைக் குறித்துக் கொண்டு தெளிவு பெறுவதும், வேறு சில பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல்கள், சேகரிக்கவேண்டிய தலைப்புகள் பற்றிக் குறிப்பதும் - படிப்பு என்பது ஒரு இனிய வேள்வி என்பதை நமக்குப் புரியவைக்கும். வித்தியாசமான விடை எல்லோரையும் போல வாழ்ந்தவர்கள் யாரும் உண்மையான சரித்திரத்தில் இடம்பெறவில்லை.

·   திருப்புதல் தேர்வு எழுதியதும் மாணவர்களே அவரது விடைத்தாளைத் திருத்தும் வாய்ப்புத் தரப்படவேண்டும். அவர்களுக்கு அவனுடைய குறைகள் தெரியவரும். ஒவ்வொரு மாணவனிடமும் இருக்கும் நிறைகுறைகள் விரிவாக அவனிடம் விவாதிக்கப்பட வேண்டும். அப்போது அவற்றைக் களைய வாய்ப்பு ஏற்படும்.

· விரயமாகாமல், அதிகப்பிரயத்தனங்கள் மேற்கொள்ளாமல் நாம் வாசிப்பை நிகழ்த்த இந்தப் பயிற்சி சாத்தியமாகும். ஆரம்ப காலங்களில் இது மிகவும் சிரமமானதாகவும், பூதாகரமான முயற்சியாகவும் தோன்றும். ஆனால் ஓரிரு வாரங்கள் இந்த முறைக்குப் பழக்கப்பட்டுவிட்டால் இது ஒரு பெரிய சுமையாக இருக்காது. நாம் ஒரு சுயக்கட்டுப்பாட்டுக்கு நம்மை உட்படுத்துகிற அதிசய மாற்றம் இதன் மூலம் சாத்தியப்படும்.

· இலட்சியவாதிகள் ஏற்கெனவே இருந்தவற்றை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை. அவர்கள் கேள்வி கேட்பவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றையும் வினாவுக்கு உட்படுத்துபவர்களாகவும், மறுவாசிப்புக்கு உட்படுத்துபவர்களாகவும் இருந்ததால்தான் அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்ய முடிந்தது.
· தேர்வுகளில்கூட வழக்கமாக எல்லோரும் எழுதும் விடைகளை எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை. விடை தனித்தும், அழகாகவும், கூடுதலான ஒரு தகவலைத் தன் நெற்றியில் சுமந்து கொண்டும் இருக்கவேண்டும். நாம் கேள்வியைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பது இதுவரை வாசித்த விடைகளிலிருந்து சற்று வேறுபட்டிருப்பதிலிருந்தே திருத்துபவருக்குப் புரிந்துவிடும். வித்தியாசமான, நேர்த்தியான விடைக்கு நாம் பாடப் புத்தகத்தை மட்டும் வாசிப்பது போதாது. தொடர்புடைய புத்தகங்களை வாசிக்கவேண்டும். ஏதேனும் ஒரு கூடுதல் செய்தியைச் சேகரிக்க வேண்டும். அது அபரிமிதமான செய்தியாக இருக்கவேண்டும். நாம் எழுதுகின்ற விடையும் நேர்த்தியாகப் பின்னப்பட வேண்டும். இவையெல்லாம் ஆரம்பத்திலிருந்தே அக்கறையுடன் நிகழும்போது எளிதில் நிறைந்தேறும்.

·   பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பு அலுப்புத் தட்டாமல், சலிப்பு ஏற்படாமல், நம்மை மேலே அழைத்துச் செல்லும். நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். கல்வி, நம் தேடுதலைத் தீவிரப்படுத்தும். கேள்விகளைச் சுற்றி வளைத்துக் கேட்டாலும், மறைமுகமாகக் கேட்டாலும் நமக்கு அதிர்ச்சியைத் தராமல் நாம் அணுக உதவும். கேள்விகளைப் புரட்டிப் போடுவதாலோ, சுழற்றி அடிப்பதாலோ நிலைகுலைந்து போகாமல், நாம் தைரியமாக எதிர்கொள்ள நமக்குத் துணிவைத் தரும்.
·  நம்முடைய உபரி வாசிப்பு (extra reading) சப்தமில்லாமல் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்கிறது. சவ்வூடு பரவுதலைப் போல நிகழ்கிற இந்த மாற்றம் நமக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியாக ஏற்படுகிறது. நம்முடைய வார்த்தைத்திறன், ஈடுபாடு, ஆர்வம், வெளிப்படுத்தும் தன்மை, புத்திக்கூர்மை ஆகியவற்றில் இயல்பாக பல முன்னேற்றங்களை இந்தக் கூடுதல் வாசிப்பு நிகழ்த்துகிறது.
·        படிப்பது என்பது பாடம் மட்டுமல்ல, படிப்பது என்பது வெறும் பாடப்புத்தகங்களோடு நின்று விடக்கூடாது. தினசரி செய்தித்தாளை நாம் வாசிக்க வேண்டும். நாட்டின் முக்கிய நடப்புகள், அன்றாடச் செய்திகள், விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் முக்கியமானவை - நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவை. ஒருநாளுக்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரமாவது நாம் செய்தித்தாளை வாசிப்பதும் - முக்கிய சம்பவங்களைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்வதும் முக்கியமான பகுதிகளைக் கத்தரித்துத் தனியாகச் சேகரிப்பதும் அவசியம்.

நல்ல சிந்தனைகளை விதைப்போம் ... 

த. ஐயப்பன், முதுநிலை விரிவுரையாளர், DIET, கீழ்பென்னாத்தூர்


கருத்துகள்

  1. இன்றைய மாணவர்களுக்கு மிகவும் பயணுடையதாக உள்ளது.மேலும் இன்றைய சமூகத்தினருக்கு மிகவும் பொருத்தமுடையதாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றல் வகைகள், நிலைகள் மற்றும் அணுகுமுறைகள்